தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் மூலம் பிரபலமானார். தமிழில் மாரி, என்ஜிகே போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு தெலுங்கு திரையுலகில் அதிக வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ஏராளமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது மருத்துவரான சாய் பல்லவியிடம் நீட் தேர்வு குறித்தும் அதனால் நடக்கும் தற்கொலை குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி “நீட் தேர்வில் குறிப்பிட்ட கேள்விகளை தான் கேட்பார்கள் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் இருக்கும். நீட் தேர்வு அச்சத்தாலும் தோல்வியாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிக மிக தவறான செயல். இந்த இளம் வயதிலேயே இதுபோன்ற பெரிய முடிவுகளை அவர்கள் எடுப்பது வேதனையை கொடுக்கிறது.
தற்கொலை செய்யக்கூடாது என்று கூறுவது எளிது. ஆனால் அவர்களது வேதனை தீர்வது மிக மிக கடினம். எனது குடும்பத்தில் கூட நீட் தேர்வால் ஒருவர் உயிரிழந்துள்ளார். எங்களாலும் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்யும் எண்ணங்களை விட்டுவிட்டு தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தோல்வி அடைந்தாலும் மீண்டும் முயற்சிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.