Categories
தேசிய செய்திகள்

‘25,000 பேர் வரை தரிசனம்’…. மாவட்ட நிர்வாகம் முடிவு…. மகிழ்ச்சியில் சாய்பாபா பக்தர்கள்….!!

ஸ்ரீரடியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகாராஸ்டிரா மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில்  இருக்கும் ஸ்ரீரடியில் புகழ்பெற்று விளங்கும் சாய்பாபா திருக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். அதிலும் கொரோனா தொற்று காரணமாக சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு தரிசனமானது ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு சாய்பாபா கோவிலில் தரிசனம், ஆராதனை போன்றவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பக்தர்கள் online.sai.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பாஸ் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக தினமும் 15,000 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கும் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி தினமும் 10,000 பக்தர்கள் சாய்பாபாவை  தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அகமதுநகர் மாவட்ட ஆட்சியரான ராஜேந்திர போசலே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அக்கோவில் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது,  வழிபாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து முன்பதிவு செய்யாத பக்தர்கள் தினமும் 10,000 பேர் வரை அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இலவச டோக்கன் வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மக்கள் தங்களது ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 25,000 பக்தர்கள் வரை சாய்பாபாவை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்” என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |