பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர் .
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் மொத்தமாக 75 தலைவர் பதவிகளில் 67 இடங்களை பாஜக கட்சி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்தப் பதிவை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். இது குறித்து விமர்சித்த ராஷ்டிரிய லோக்தளம் தலைவரான ஜெயந்த் சவுத்ரி கூறுகையில் ,’சாய்னா அரசாங்க பேட்மிண்டன் வீராங்கனை’ என்று விமர்சித்துள்ளார் . இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு தலைவரான அஸ்லாம் பாஷா ‘சாய்னா நேவால் எப்போது விளையாடுவதை நிறுத்துவார்’ என்று கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வீராங்கனை சாய்னா நேவால் பாஜக கட்சியில் இணைந்தார் என்பது நினைவுகூறத்தக்கது .