Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளைஞரின் வேடிக்கை செயல்… என்னால சொல்ல முடியாது… கண்டித்து அனுப்பிய காவல்துறையினர்…!!

வேலூரில் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் இளைஞர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது,  கலெக்டர் அலுவலகம் மேம்பாலம் அருகில் சத்துவாச்சாரி காவல் அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று நபர்கள் பயணித்து வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, ஒரே வண்டியில் மூன்று நபர்கள் பயணம் செய்வது தவறு என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த மூன்று நபரின் பெயரையும் காவல்துறையினர் கேட்டபோது, அவர்களுள் இருந்த ஒரு இளைஞர் பெயரை தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தான் தன் பெயரை தெரிவிப்பதாகவும், அவர்களை இங்கே வர சொல்லுங்கள் என்றும் காவல்துறையினரிடம் தகராறு செய்துள்ளார். அதன் பின் அந்த இளைஞர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்ல முயன்றபோது, அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞர் சத்துவாச்சாரியில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் போக்குவரத்து சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து அந்த வழியாக காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஜீப்பில் வந்தபோது, சாலையில் அமர்ந்து இருந்த அந்த இளைஞரை கூப்பிட்டு விசாரித்துள்ளார். அப்போதும் அந்த இளைஞர் தன் பெயரை சொல்ல மறுத்துவிட்டார். அதன்பின்னர் அந்த இளைஞர் கேட்டரிங் படித்துள்ளதாகவும், இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, உடல்தகுதி தேர்வுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரின் எதிர்காலத்தை  கருத்தில் கொண்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் மோட்டார் சைக்கிளின் நம்பரை மட்டும் பதிவு செய்து, அவரை கண்டித்து அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |