கோவிலுக்கு செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உடும்பன் மற்றும் ஆல்மாத சுவாமி கோவில் இருக்கின்றது. இந்தக் கோவில்களில் வருடந்தோறும் மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டும் மக்கள் பொங்கல் வைக்க அங்கு சென்றுள்ளனர். அப்போது தலமலை வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் மக்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக அவ்வழியாக ஒரு அரசு பேருந்து வந்தது. அந்த பேருந்தை மலைகிராம மக்கள் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் சுழற்சி முறையில் மலை கிராம மக்கள் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதனையடுத்து மலை கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.