100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாதிரி கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக 100 நாள் வேலை எங்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து நாங்கள் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் 100 நாள் வேலை வழங்கவில்லை. எனவே, 100 நாள் வேலை விரைவில் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.