சாலை தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று அதிகாலையில் திருநெல்வேலிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை மதுரையில் வசிக்கும் சரவணன் என்பவர் ஓட்டினார். மேலும் அந்த பேருந்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் நெல்லை தச்சநல்லூர் ரவுண்டானா பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவர் பேருந்தின் குறுக்கே வந்துவிட்டார். இதனால் டிரைவர் சரவணன் விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்காக பேருந்தை திருப்பினார்.
ஆனால் பேருந்து நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தின் முன்பகுதியின் கண்ணாடி நொறுங்கி முழுவதும் சேதமடைந்தது. மேலும் பேருந்தில் அமர்ந்து வந்த 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் காயமடைந்த பயணிகள் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.