சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில் 25 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 23-ஆம் தேதி நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதில் வாலிபர் படுகாயமடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதனால் வாலிபரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருக்கும் கூடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார், எந்த ஊரில் வசிப்பவர் என்பது பற்றியும் மற்றும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்தும், அதை ஓட்டி வந்த ஓட்டுனர் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.