மண்சரிவால் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததில் வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சுற்றுலாத்தளம் திறக்கப்படாத நிலையில் தற்போது திறக்கப்பட்டு இருப்பதினால் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது கனமழை பெய்த காரணத்தினால் கொண்டை ஊசி வளைவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு பெரிய ஆழமான ராட்சச பாறை சாலையோரத்தில் மரங்களுடன் சாய்ந்து விழுந்துள்ளது. அப்போது வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் எந்த விதமான விபத்துக்களும் ஏற்படவில்லை.
இதனையடுத்து மண்சரிவு ஏற்பட்ட ராட்சச பாறை சாலையோரமாக விழுந்து கிடந்ததால் அனைத்து வாகனங்களும் ஒன்றின் பின் ஒன்றாக அப்பகுதியை கடந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மணி சுந்தரம், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் செயற்பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் பாதிப்படைந்த இடங்களில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெரிய அளவிலான ராட்சச பாறையை அகற்ற முடியாத நிலையில் பொக்லைன் எந்திரம் மற்றும் வெடி வைத்து பாறை அகற்றி சாலையை சீரமைத்துள்ளனர்.