சாலையோர கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வியாபாரிகள் மற்றும் தி.மு.க-வினர் அதனை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் மேற்கு பகுதியில் இரண்டு வாயில்களும், கிழக்குப்பகுதியில் இரண்டு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலையோர பழக்கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற போது திமுக எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம் கடைகளை அகற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகளை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி உதவி செயற்பொறியாளரான ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் கடைகளை அகற்ற சென்றுள்ளனர். அப்போது தி.மு.க நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து பொக்லின் எந்திரத்தை முற்றுகையிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் செய்ததால் அவர் தற்காலிகமாக பல கடைகளை அமைத்துக் கொள்ளலாம் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து சரவண குமார் கூறும்போது தஞ்சை பேருந்து நிலையத்தில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு அங்கு சாலை அமைக்கப்பட உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது தி.மு.க-வினர் மற்றும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.