தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த சாக்குப்பையில் சாமி சிலை மற்றும் கவசம் இருந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள கண்டப்பங்குறிச்சியில் இருக்கும் சேலம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சாக்கு பை ஒன்று கிடந்துள்ளது. அதை அவ்வழியாக சென்றவர்கள் பிரித்து பார்த்த போது சாமி சிலை மற்றும் சிலைக்கு அணிவிக்கும் கவசம் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர்.
அந்த விசாரணையில் அடையாளம் தெரியாத கார் பஞ்சராகி நின்று கொண்டு இருந்ததும், அவர்கள் சாமி சிலை மற்றும் கவசத்தை விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அருகில் இருக்கும் கும்பகோணத்தில் வசிக்கும் கவசம் தயாரிக்கும் கடை முகவரிக்கான அடையாள அட்டை இருந்துள்ளது. பின்னர் அந்த கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்து சிலை மற்றும் கவசத்தை ஒப்படைத்துள்ளனர். மேலும் இது எந்த சாமி சிலை, அவை கடத்திவரப்பட்டதா என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.