நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பருத்தி விலை அதிகமாக விற்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் வைத்து வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அக்கரைப்பட்டி, மல்லசமுத்திரம், ரசாபாளையம், பொரசல்பட்டி, மாமுண்டி, மதியம்பட்டி, குருசாமிபாளையம், நந்தமேடு, வெண்ணந்தூர், மின்னக்கல், சவுதாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்ய வந்துள்ளனர்.
இதனையடுத்து திருப்பூர், கோவை, அவிநாசி, ஆத்தூர், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், சேலம், எடப்பாடி போன்ற பல்வேறு பகுதியிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டிபோட்டு பருத்தியை கொள்முதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தை விட இந்த வாரம் பருத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக 8,999 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10,009ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் பருத்தி அதிகளவில் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.