ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மதுபானம் விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுவரை நடத்திய மொத்தம் மற்றும் சில்லறை மதுவிற்பனையாளர்கள் 2018-19, 2019-20ம் ஆண்டுக்கான விற்பனை கணக்கை உடனே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வணிக வளாகங்கள், பெரிய கடைகள், ஷாப்பிங் மால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கட்டுமான பணிகள் முடங்கின. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2ம் கட்டமாக ஊரடங்கு 37வது நாளாக அமலில் உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் சில ஊரடங்கு தளர்வுகளை கொண்டுவந்தன. கட்டுமான பணிகள், 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவை புதுச்சேரி போன்ற சில இடங்களில் தொடங்கப்பட்டது.
ஆனால் இதுவரை தமிழகத்திலோ, புதுச்சேரியிலோ எந்த டாஸ்மாக் கடைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கள்ளச்சாராயம் விற்பனை, மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை போன்றவை அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க கலால் துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியில் ஊரடங்கை மீறி மது விற்பனை செய்ததால் 100 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.