பழைய கார் விற்பனை செய்வதாகக் கூறி ஆட்டோ டிரைவரிடம் 80 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது தவ்பீக் அலி என்பவர் ஆன்லைனில் பழைய பொருட்கள் விற்பனை தளத்திற்குச் சென்று பழைய கார் பற்றி தேடி இருக்கின்றார். அப்போது சென்ற 2013 ஆம் வருடம் வாங்கப்பட்ட பிரபல நிறுவனத்தின் கார் ஒன்றின் விலை 2 லட்சத்து 90 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவர் அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது அதில் பேசியவர் தனது பெயர் ஸ்ரீஹன்ஸ்குமார் ஐதராபாத்தில் இருக்கும் ராணுவ முகாமில் வேலை செய்து வருவதாகவும் சில மாதங்களுக்கு முன்பாக தான் திருவண்ணாமலையிலிருந்து பணியிட மாறுதலில் வந்ததாகவும் கூறி 2.5 லட்சத்துக்கு காரை விற்பனை செய்ய சம்மதித்திருக்கின்றார்.
பின் கார் தொடர்பான ஆவணங்களையும் புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருக்கின்றார். இதனை முகமது தவ்பிக் அலி ஆவணங்களை பரிசோதனை செய்ததில் உண்மை எனவும் தெரிய வந்தது. இதையடுத்து முன் பணமாக அவர் ஐயாயிரம் செலுத்தியிருக்கின்றார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபர் காரை கொரியர் மூலம் உங்களின் முகவரிக்கு அனுப்பி வைப்பதாக கூறி 4000 ரூபாய் தொகையை பெற்றுக் கொண்டார். பின்னர் ஏழு தவணைகளில் மொத்தம் 79 ஆயிரத்து 200 ரூபாயை பெற்றுக் கொண்டார். அவர் தொடர்ந்து பணம் கேட்டதால் தன்னை ஏமாறப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.