சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோயில் அருகிலுள்ள தனியார் லாலா இனிப்புக் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது குடோனில் 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 3 டன் நெகிழிப் பைகளை வைத்திருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி ஆணையர், தனியார் லாலா இனிப்பு கடையின் உரிமையாளருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபாரதமும் விதித்தார். மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர், நெகிழிப் பைகள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய சேலம் மாநகரத்தில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை கடைகளில் பயன்படுவத்துவது தெரிந்தால் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.