தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கொங்கு மண்டலம், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பப்படவில்லை எனவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை அங்கு கொண்டாடவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. இது பற்றி விசாரிக்க போனால் சேலத்திற்கு அமைச்சர் இல்லாதது அம் மாவட்டத்தில் பெரிய குறைவாக பார்க்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
அதாவது சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாததால் அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம். செல்வகணபதி கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கியதோடு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து அனுப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.
அதாவது இளைஞர் அணி செயலாளராக இருந்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்காக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது தற்போது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின்அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தனக்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஆதரவாக இருப்பார்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.