ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
சேலம் மாவட்டத்தில் பெரிய புதூர் பகுதியில் வசிக்கும் சிலர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் முத்தழகன் என்ற கூலித்தொழிலாளியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் சாராய ஊறல் போட்டது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தந்தை பழங்கள் வியாபாரம் செய்து வருவதாகவும் அதிலிருந்து மீதமான பழங்களை வைத்து சாராய ஊறல் போடுவதற்கான வழிமுறைகளை யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். மேலும் கூலி தொழிலாளியான முத்தழகனை கைது செய்ததோடு, காவல்துறையினர் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட 10 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சேலம் பெருமாகவுண்டம்பட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான சந்திரகலா தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பூபதி என்னும் கல்லூரி மாணவன் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்ததுள்ளது. இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாததினாலும், தனது தந்தை கூலி தொழிலாளி என்பதனாலும், குடும்ப வறுமை காரணமாக இவ்வாறு சாராயம் காய்ச்சுவதாக அந்த வாலிபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 15 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.