சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூரை தலைமையிடமாக வைத்து புது மாவட்டம் அமைக்கும் திட்டம் தொடர்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று கேஎன் நேரு கூறியிருக்கிறார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நடந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சராக கே என் நேரு பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்.
அதற்கு முன், ஈஸ்வரன் பேசியதாவது, தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு வருடங்களில் விண்ணப்பித்த அனைத்து மக்களுக்கும் இலவச மின்சாரம் உடனடியாக அளிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும், மேட்டூரில் அதிக தண்ணீர் இருக்கிறது.
எனினும் மேட்டூருக்கு அருகில் இருக்கும் கொளத்தூரில் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறினார். உளுந்தூர் பேட்டையில் இருந்து சேலம் மாவட்டம் வரை இருக்கும் சாலை போக்குவரத்தில், அதிக நெரிசல் இருக்கிறது. அதை சரிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைநகராக வைத்து தனியாக ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்குப்பின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரான கே என் நேரு தெரிவித்திருப்பதாவது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கும் வகையில் தான், இருக்கிறது.
இதில், சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அதன் பின்பு முதலமைச்சர் தீர்மானிப்பார் என்று கூறியிருக்கிறார்.