சேலம்-விருத்தாச்சலம் ரயில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு முன்பதிவில்லா பயணிகள் ரெயில் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவை ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அந்த ரெயில் சேவை தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் பயணிகள் மீண்டும் ரெயில் சேவையை 2 முறை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பழைய முறைப்படி சேலம்-விருத்தாசலம் ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சேலம்-விருத்தாசலம் ரெயில் (வண்டி எண்-06896) சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மார்க்கெட், டவுன், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி, வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், சின்னசேலம் வழியாக மதியம் 1.05 மணிக்கு விருத்தாசலத்திற்கு சென்றடையும். இதே போன்று மதியம் 2.05 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சேலத்திற்கு மாலை 5.05 மணிக்கு வந்து சேரும். எனவே சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இந்த ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.