சளி, இருமல் வந்தால் அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி மீண்டுவிடலாம்… எப்படி?
சளியும், இருமலும் வந்து விட்டால் நாம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல, கூடவே தொண்டை வாலியும் வந்துவிட்டால், அவ்வளவு தான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாக மாறிவிடும். பருவ நிலை மாறும் போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெது வெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும், சளியையும் குறைக்கும்.
இஞ்சி: வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து அதில் சிறிது உப்பை தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பயன் கிடைக்கும்.
பூண்டு: நான்கு அல்லது ஐந்து பூண்டு பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சேர்த்து பூண்டை பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதை சாப்பிட்டு விட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் பூட்டும் பயன்படுத்தலாம். சளி,இருமலை, இயற்கை வழியில் நீக்கும்.
ஆளி விதை: சிறிது நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை (ஆண்டிபயாடிக்குகளான) எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.
கருமிளகு டீ: இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டை வழியை குறைக்கும். ஒரு கப் வெண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்து கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும் 15 நிமிடங்களுக்கு பிறகு குடிக்கலாம்.
பால் மற்றும் மஞ்சள்:சூடான பாலில் மஞ்சள் சேர்த்து பருகுவது சளியை போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி , போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர்க்கும் ஏற்றது மஞ்சள் பால்.
எளிய வீட்டு மருந்து: சளி, இருமலை போக்கும் இனிப்பான மிட்டாய்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள், இவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்து விட முடியும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை சாறாக பிழிந்து கொள்ளவும். சிறிதளவு கருமிளகை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். இஞ்சிசாறு, கருமிளகு பொடி , இவற்றுடன் மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி தயாரித்து கொள்ளவும். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கி விட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உண்டு. இது சளி காய்ச்சலுக்கு காரணமான தொற்றுக்களை நீக்கவும் உதவும். சளி வந்தால் வெந்நீர் அருந்த வேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றை பின்பற்றினால் கூட சளியும், இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிபோகும்.