மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நடந்த பயிற்சியில் கலெக்டர் காய்கறிகளை வெட்டி சமைப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் வைத்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் உணவு தயாரிக்க வெங்காயம் மற்றும் காய்கறிகளை கத்தியால் துல்லியமாக வெட்டி உணவு தயாரிக்கும் முறை குறித்து கலெக்டர் விளக்கியுள்ளார்.
இந்நிலையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நகர் பகுதி மற்றும் ஊரக பகுதிகளில் 7000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் 100% தரமான தேன் தயாரித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் தயாரிக்கும் தேனுக்கு என்று தனியாக நிறுவனப் பெயர் இல்லாமல் இருந்து வருகிறது.
இதனையடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் பெரும் நிதியின் மூலமாக பல தொழில் புரிந்து தொழில் முனைவோராக மாற வேண்டும் எனவும், அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு உரிய நிறுவனப் பெயர் உருவாக்கப்பட வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இதனை தொடந்து தங்களுக்கு தேவையான கடன் உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயிற்சியில் பல வகையான சுவையான உணவு மற்றும் தேநீர் தயாரிப்பு குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.