திருவாரூர் மாவட்டத்தில் 2,25,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டுமொத்த சம்பா சாகுபடி செய்து முடிக்க நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலமாக இந்த சம்பா சாகுபடி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பாதிப்பின் காரணமாக சம்பாசாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகள் உரிய இழப்பீடு பெறுவதற்காக ஏற்றவாறு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் உடனடியாக அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் தங்கள் செய்யக்கூடிய சம்பா சாகுபடி குறித்த விவரங்கள் உண்மையாக பதிவு செய்ய வேண்டும் என்றும் ஒரே சர்வே எண்ணில் பல விவசாயிகள் பதிவு செய்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான தங்கள் செய்யக்கூடிய சம்பா சாகுபடி பரப்பை அதிகரித்துக் காட்டாமல் உண்மையான நிலவரத்தை பதிவு செய்து காப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.513 பிரீமியம் செலுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கள் வாங்கி சரியான முறையில் இ-சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சம்பா சாகுபடியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய இழப்பை பெறலாம். மேலும் விவசாயிகள் கடைசி நேரத்தில் ஒட்டுமொத்தமாக காப்பீடு செய்ய முற்பட்டு அதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியருக்கு கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.