பிரிட்டனிலிருந்து சென்று தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இளம்பெண் மீண்டும் பிரிட்டனுக்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் 15 வயது இருக்கும்பொழுது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனிலிருந்து இரண்டு இளம்பெண்களுடன் சிரியாவிற்கு ஓடியுள்ளார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு சமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் வரத்தொடங்கியது. அதனால் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசாங்கம் அவரது குடியுரிமையைப் பறித்தது.
குடியுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று எண்ணிய சமீமா பேகம் தன்னை பிரிட்டனுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் , சமீமா நேர்மையாக முறையீடு செய்யவேண்டும் என்பதால் அவர் பிரிட்டனுக்குள் வருவதற்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பிற்கு எதிராக உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அந்த வழக்கில் சமீமாவை பிரிட்டனுக்குள் அனுமதிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படும் என்றும் பொதுமக்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் உள்துறை அமைச்சகம் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தது. அந்த வழக்கில் சமீமா பேகத்தை மேல் முறையீடு செய்வதற்காக பிரிட்டனுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.