கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் குள்ளம்பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கௌதம். இவர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன் பின் மலையின் அடிவாரத்தில் இருந்து படி வழியாக இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கௌதமுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக மலைக்கோவிலில் உள்ள சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ரோப் கார் மூலமாக அவரை கீழே இறக்கி ஆம்புலன்ஸில் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கௌதம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கௌதமின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.