Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சாதாரண உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சமையலறை மருத்துவமனை..!!

உங்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரண உடல் நல பிரச்சனைகளுக்கு சமையலறையிலே தீர்வு காணலாம். அருகில் உள்ள மருத்துவமனை என்பதை நினைவில் வையுங்கள்.

ஊரடங்கு உத்தரவால் நாம் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளோம். இதனால் பலபேரிடையே மனதில் பயம் தான் குடி கொண்டிருக்கும். சாதரணமாக ஏற்படக்கூடிய வாந்தியும், வயிற்று வலியும் கூட அவர்களை கவலை அடைய செய்துவிடுகிறது.

அப்படிப்பட்ட கவலை ஏதும் இனி தேவையில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவமனை செல்லவேண்டும் என்ற அவசியமும் கூட தேவையில்லை. உங்களுக்கு ஏற்படும் பெரும்பாலான சாதாரண உடல் நல பிரச்சினைகளுக்கு, உங்களுடைய வீட்டின் சமையல் அறையிலேயே மருந்து உள்ளது. உங்களது சமையல் அறை கூட ஒரு மருத்துவமனைதான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் எப்பொழுதும்.

பல்வலி:

பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் உயிரே போகும் அளவிற்கு பல்வலி ஏற்படும். வலி வந்ததும் சிறிதுகடுகு வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். வலி எளிதில் கட்டுப்படும். கடுக்காய் தோட்டை சுட்டு கரியாக்கி அஅதோடு சிறிது படிகாரம் மற்றும் மிளகுதூள் கலந்து தினமும் பல் தேய்த்து வந்தால், விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும். வலியிருக்கும் பல் மீது கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து வைத்து ஓத்தி எடுத்தாலும் எளிதில் வலி நீங்கிவிடும்.

சளி மற்றும் இருமல்: 

ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் நான்கு வேளை வீதம், ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இருமல் சரியாகிவிடும்.  ஆடா தோடை இலையுடன்  சீரகம் சேர்த்து வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். அதை ஆறவைத்து பருகி வாருங்கள் சீக்கிரம் இருமல் கட்டுப்பட்டுவிடும். காலையில் வெறும் வயிற்றில் ஆடாதோடை இலை சாற்றுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்டால் சளி மலம் வழியாக வெளியேறிவிடும்.

மலசிக்கல்:

சிறிதளவு இந்துப்பூ, அதன் இரு மடங்கு அதிமதுரம், நான்கு மடங்கு திப்பிலி, ஆறு மடங்கு கடுக்காய் போன்றவற்றை, தனித்தனியாக அரைத்து ஒன்றாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்படும் பொழுது இதை வெந்நீரில் கலந்து குடியுங்கள்.

விக்கல்:

சுக்கு அரைத்து, அதை தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நீங்கி விடும். பூண்டு மற்றும் சீரகம் ஆகியவற்றை பொன்னிறமாக நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளுங்கள். சாப்பிடும் பொழுது  முதல் கவளம் சாதத்தில் அதனை சேர்த்து சாப்பிடுங்கள் விக்கல் சரியாகும்.

வயிற்று வலி மற்றும் வயிற்றுபோக்கு:

வயிற்று வலி ஏற்பட்டால் ஒருபிடி கறிவேப்பிலையை, புளித்த மோரிலோ, சுடுநீரிலோ அரைத்து குடியுங்கள். சிறிதளவு கடுகு எண்ணெய்யை சூடாக்கி தொப்புளை சுற்றி தேய்த்து கொள்ளுங்கள் வயிற்று வலி நீங்கி விடும். கறிவேப்பிலை கொழுந்தை மென்று சாப்பிடுங்கள் மலத்தில் ரத்தம் வெளியேறுவது நின்று விடும்.

இந்துப்பூ, சீரகம், அதிமதுரம், திப்பிலி, சுக்கு, கடுக்காய்தோடு ஆகியவைகளை தூளாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை சிறிதளவு வெல்லத்தில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

வாயு:

வாயு தொந்தரவு ஏற்பட்டால் பாலில் பூண்டு போட்டு காய்ச்சி இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குடியுங்கள்.  ஒரு வாரம் தொடர்ந்து இதை பருகி வாருங்கள் எளிதில் வாயு தொல்லை நீங்கிவிடும். பூண்டுவை தீயில் சுட்டு கூட சாப்பிடுங்கள். சிறிது பெருஞ்சீரகத்தை அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி வாயு தொல்லையும் இருக்காது.

வாய் துர்நாற்றம்:

ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் வாய் நாற்றம் நீங்கிவிடும். தினமும் காலையில் பல்தேய்த்து முடித்ததும் துளசி இலைகளையோ அல்லது புதினா இலை களையோ வாயில் போட்டு மென்று தின்னும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளுங்கள். கிராம்பு இலை, மாவிலை ஆகியவற்றையும் மென்று சாப்பிடலாம்.

இஞ்சி சாறும், எலுமிச்சை சாறும் சம அளவில் எடுத்து சிறிதளவு இந்துப்பூவும் கலந்து தினமும் நான்கு வேளை பருகினால் ஜீரண பிரச்சினை நீங்கும். இஞ்சி சாறில் மிளகு, சீரகம் கலந்து மென்று தின்றால் புளித்த ஏப்பம் அகலும். இஞ்சி சாறில் சிறிதளவு உப்பு கலந்து ருசித்தால் வயிற்றுவலி, வாந்தி கட்டுப்படும்.

மாதவிடாய் பிரச்சனை:

மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து மாதவிடாய் வரும் நாள் வரை தினமும் மூன்று முறை புதினா சாறு பருகவேண்டும். 15 மி.லி. புதினா சாறில் சிறிதளவு வெல்லம் கலந்துகொள்ளலாம். சிறிதளவு கற்றாழை ‘ஜெல்’ எடுத்து காலை, மாலை நேரங்களில் சாப்பிட்டாலும் மாதவிலக்கு வலி மறையும்.

எள்ளுவை தூளாக்கி சிறிதளவு சுடுநீரில் கலந்து தினமும் இரண்டு வேளை பருகினாலும் வலி கட்டுப்படும். உணவு சாப்பிட்ட பின்பே இதனை பருகவேண்டும். மாதவிலக்கு தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பிருந்து இதனை பருகி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

மூன்று பங்கு கறிவேப்பிலை, ஒரு பங்கு மிளகு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு உருட்டி புளித்த மோரில் கலக்கி குடித்தால் வாய்ப்புண் ஆறிவிடும். கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி கொப்பளிப்பதும் மிகவும் நல்லது. நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து அதில் கருஞ்சீரக தூள் கலந்து குடித்தாலும் நல்லது.

Categories

Tech |