Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரிக்கு அடியில் மாட்டிய சிறுவன்…. நடந்த அதிசய சம்பவம்…. வைரலாகும் காட்சிகள்….!!

லாரியின் அடிபகுதியில் மாட்டிய சிறுவன் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் டவுன் பிச்சனூர்- பலமநேர் சாலை நாள்தோறும் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகின்றது. இந்த சாலை வழியாகத்தான் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டி இருக்கின்றது. இந்தச் சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்தினால் பலர் இறந்ததும், படுகாயம் அடைந்ததும் அதிகமாக நடந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 30 வயதுடைய வாலிபர் ஒருவர் இந்த சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் காலை 10 மணி அளவில் 7 வயது சிறுவன் ஒருவன் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு வேகமாக ஓடி வந்தபோது ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி திடீரென அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுவன் லாரியின் அடியில் மாட்டி கொண்டதை கண்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதற்குள் லாரியின் பின் பக்கத்திலிருந்து அந்த சிறுவன் சிறு காயங்களுடன் எழுந்து வந்துள்ளார். எனவே லாரியின் நடுப்பகுதியில் மாட்டியதால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சிறு காயங்களுடன் சிறுவன் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.

அதன்பின் அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் ஒரு கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. இந்த பதிவுகளை அந்த கடைக்காரர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதனால் லாரியில் மாட்டிய சிறுவன் உயிர் தப்பிய காட்சிகள் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின்படி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர்.

Categories

Tech |