Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சமூக விரோதிகளின் பொழுதுபோக்கு கூடாரமாக மாறியுள்ள அரசுப்பள்ளி… மர்ம நபர்களின் அட்டூழியம்…!!!

செய்யூர் அருகே உள்ள நைனார் குப்பம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு நடுநிலை பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி நைனார் குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. அப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் முழுமையாக கட்டப்படவில்லை. சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி நுழைவு பகுதியில் மட்டும் மதில் சுவர் எழுப்பப்பட்டு நுழைவாயில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. பள்ளியின் மற்ற மூன்று புறங்களிலும் சுவர்கள் எழுப்பப்படாததால் திறந்தவெளியாக காட்சியளிக்கின்றது.

 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் பள்ளி மூடப்பட்டு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை மர்ம நபர்கள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பகல் மற்றும் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்துதல், கழிப்பறைகளை அசுத்தம் செய்தல் மற்றும் பாலியல் விவகாரம் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களை செய்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக அப்பகுதி மக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இருந்தாலும் அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமூக விரோதிகளின் இத்தகைய செயல்களால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில்  இருக்கின்றனர். அதனால் மாவட்ட நிர்வாகம், ஊரடங்கு காலம் முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக இந்தப் பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |