சாணக்கியரின் பொன்மொழிகள் வாழ்க்கைக்கு என்றும் ஒரு புரிதல் மற்றும் தகுந்த அறிவுரை..
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று யாருக்குதுதான் ஆசை இருக்காது. வெற்றி பெற தேவை போதுமான பயிற்சியும், கடுமையான பயிற்சியும் தான். ஆனால் சிலருக்கு ஒரு தூண்டுகோல் தேவைப்படும். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
தமிழில் ஒரு பொன்மொழி உள்ளது. நாம் எவ்வளவுதான் திறமையானவராக இருந்தாலும் வெற்றியை நோக்கி ஒரு தூண்டுகோல் அவசியம். தூண்டுகோலானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அம்மாவாக இருக்கும், சிலருக்கு நண்பனாக இருக்கும். அப்படி சிறந்த தூண்டுகோல்களில் ஒன்றுதான் சாணக்கியரின் சிந்தனைகள்.
அர்த்தசாஸ்திரம் தந்த சாணக்கியரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவரின் ஒவ்வொரு சிந்தனைகளும் நமக்குள் பலவித சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.
1. உனது இரகசியங்களை ஒருபோதும் எவருடனும் பகிராதே:
மனித குலம் தோன்றிய நாள் முதலே அவர்களால் செய்ய இயலாத ஒன்று இரகசியத்தை பாதுகாப்பது. எவர் ஒருவரிடம் நீ உன் இரகசியத்தை பகிர்ந்து கொள்கிறாயா அவரிடம் நீ உன் சுதந்திரத்தை இழப்பாய் என்று சாணக்கியர் கூறுவது மறுக்க முடியாத உண்மை. இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். எனவே எந்தவொரு இரகசியத்தையும் எவருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது
2. ஒருவரின் நல்ல குணம்:
மலரின் வாசனையானது காற்று வீசும் திசையில்தான் பரவும். ஆனால் ஒருவரின் நல்ல குணம் அனைத்து திசைகளிலும் பரவும்.
மணம் கமழும் மலரின் நறுமணம் கூட காற்று எந்த திசையில் வீசுகிறதோ அதை நோக்கி நகரும். ஆனால் ஒரு நல்ல மனிதரின் குணம் அவரை சுற்றியுள்ள அனைவருக்கும், அனைத்து திசைகளிலும் பரவக்கூடியது. மலர் போல் இல்லாமல் நல்ல மனிதராய் இருப்பதே நமது சுற்றத்தாரை தீர்மானிக்கும்.
3. பலவீனம்:
பாம்பானது விஷத்தன்மையுடன் இல்லாவிட்டாலும், இருப்பது போல நடிக்க வேண்டும்.
விஷம் இல்லாத பாம்புகள் எத்தனையோ இருக்கிறது, ஆனால் பாம்பென்றாலே அதற்கு பயப்படும் சுபாவம் மனிதர்களிடத்தில் உள்ளது. அதுபோலத்தான் நாம் எவ்வளவு பலவீனமானவராய் இருந்தாலும் நமது பலவீனத்தை மற்றவர் முன் காட்டக்கூடாது.
4. முட்டாள் தனம்:
முட்டாளிடம் இருக்கும் புத்தகம் கண் தெரியாதவருக்கு முன் இருக்கும் கண்ணாடி போன்றது…
கண் தெரியாதவர்களுக்கு முன் வைக்கப்படும் கண்ணாடியால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்களால் அவர்கள் முகத்தை பார்க்கவோ அல்லது சரிசெய்யவோ இயலாது. அதுபோலத்தான் ஒரு முட்டாளின் கையில் இருக்கும் புத்தகத்தால் அவனுக்கு எந்தவித பலனும் இல்லை. அவனால் அதனை புரிந்துகொள்ளவோ அதன் கருத்துக்களை பின்பற்றவோ இயலாது.
5. முயற்சியின் ரகசியம்:
ஒரு மனிதனை சிறந்தவனாய் மாற்றுவது அவனின் பிறப்பு அல்ல, அவனின் செயல்களே..
இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு நமது மாண்புமிகு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அய்யாதான். இந்தியாவின் கடைக்கோடியில் சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்த அவர் தன் சீரிய செயல்களின் மூலம்தான் உலகத்தின் தலைசிறந்த விஞ்ஞானியாய் உயர்ந்தார்.
அதேபோல எத்தனையோ பணக்கார குடும்பங்களில் பிறந்தவர்கள் தவறான செயல்களால் மதிப்பிழந்து மாண்டனர், மாண்டுகொண்டும் இருக்கின்றனர். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில் பிறப்பு எப்பொழுதும் ஒருவரை வெற்றியாளராக மாற்றாது, அவரவர் முயற்சியே வெற்றியை ஈட்டித்தரும்.
6. அச்சத்தை அழித்துவிடல்:
அச்சம் உன்னை நெருங்கும் முன் அதனை தாக்கி அழித்துவிட வேண்டும்…
மனித இனத்தின் மிகப்பெரிய எதிரியே அவர்களுக்குள் இருக்கும் பயம்தான். மனிதர்கள் வெற்றிக்கு தடையாக இருப்பதும் பயம்தான். அந்த பயம் நெருங்கும் முன் அதனை நெருங்கி சந்திப்பதே அதனை தகர்த்தெறிவதற்கான முதல் வழி என்று கூறுகிறார் சாணக்கியர்.
7. கடினமான முயற்சி:
சிங்கத்திடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது யாதெனில் எதை செய்தாலும் அதனை தன் முழுமனதுடனும், கடுமையான முயற்சியுடனும் செய்யவேண்டும். ”
சிங்கம் ஒரு இரையை குறிவைத்துவிட்டால் அதனை வேட்டையாடும் வரை அதன் கவனம் வேறு எங்கும் திசைமாறாது. இரையை வேட்டையாட சிங்கம் எந்த எல்லைக்கும் செல்லும். அதேபோல மனிதனும் தன் குறிக்கோளை அடையும் வரை திசைமாறாமல் கடினமான முயற்சியுடன் தன் இலட்சியத்தை அடைய வேண்டும்
8.சுயநலம்:
அனைத்து நட்புக்கு பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கிறது. சுயநலங்கள் இல்லாத நட்பு இல்லை. இது ஒரு மிகவும் கசப்பான உண்மை..
நட்பு என்பது மனித வாழ்வின் அற்புதங்களில் இருக்கும் மிகச்சிறந்த அற்புதமாகும். எங்கோ பிறந்த ஒருவர் நமக்காக கண்ணீர் விடுவதும், கஷ்டங்களில் உதவுவதும் நட்பில் மட்டுமே சாத்தியம். ஆனால் சுயநலம் என்பது மனிதர்கள் உடன்பிறந்த குணமாகும். எனவே அது எந்நாளும் அது மனிதனை விட்டு பிரியாது. நட்பிற்கும் இது பொருந்தும். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.