பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷன். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் தான் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் குறைவான வாக்குகள் பெற்றதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
இவரும் நடிகை சனம் ஷெட்டியும் இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த மே மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
மேலும் ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்ததாகவும், ஆனால் அதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதால் நிகழ்ச்சி முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே தர்ஷன் வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு செல்ல சனம் ஷெட்டி 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு தர்ஷன், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும், தான் நடிகர்களுடன் தகாத உறவு வைத்து இருப்பதாக தர்ஷன் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சனம் ஷெட்டி, தர்ஷன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவுக்கு இந்த புகாரை காவல் துறையினர் மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.