முழு ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் முழுஊரடங்கின் போது கல்லாத்து ஓடையில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை விட்டல்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கம் முனியம்மாள் போலீசாருக்கு அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கல்லாத்து ஓடையில் சோதனை நடத்தினர். அந்த சமயத்தில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 24 பேர் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர். மேலும் மணல் அள்ளுவதற்காக பயன்படுத்தப்பட்ட எந்திரம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.