சீனாவில் கொரோனா பரவல் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் உஹான் நகரில் கொரோனா பரவல் தொடர்பாக செய்தி சேகரித்த செய்தியாளரான சாங் சாம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றை கையாளுவது குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சாங் சாம் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சீன அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சாங் சாம் உடல் எடை மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் நீண்ட காலம் உயிர்வாழ மாட்டார் எனவும் அவரது சகோதரர் சாங்சூ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் சாங் சாம் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவருக்கு மூக்கின் வழியாக உணவு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து சாங் சானை விடுதலை செய்ய கோரி மனித உரிமை அமைப்புகள் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.