தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
உலகப்புகழ் வாய்ந்த தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறில் உள்ளது. இக்கோயில், புதுச்சேரி மாவட்டத்திலுள்ள யூனியன் பிரதேசத்தால் இயங்கப்படுகிறது. சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருவது இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமைகளில் தரிசனத்திற்கு செல்வது வழக்கமான ஒன்றாகும்.
இதே போல் சனிப்பெயர்ச்சிகளிலும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வகையில், வருகிற 27ம் தேதி அதிகாலை இவ்விழாவை நடத்துவது குறித்து காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை முடிவில் அவர்கள் கூறியதாவது:- “இந்த விழாவிற்கு வருகை தரும் அனைத்து பொது மக்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மேலும் விழாவிற்காக சிறப்புப் படைகள் புதுச்சேரியில் இருந்து வரவழைக்கப்பட இருக்கிறது. மேலும், இன்றிலிருந்தே பல பாதுகாப்பு நடைமுறைகள் போலீசாரால் துவங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளார்கள்.
மேலும் அனைத்து பக்தர்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். போலீசாரும் சட்ட பாதுகாப்பு திட்டங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு முழுமையாக அளிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.