கோவிலிருந்த சந்தன மரத்தை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலை ரோட்டில் தீர்த்த விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 சிறிய சந்தன மரங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று ஒரு மரத்தை யாரோ மர்ம நபர் வெட்டியுள்ளனர். அதில் ஒரு பகுதியை மட்டும் மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து அலுவலகத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் மரம் வெட்டப்பட்டிருந்தை பார்த்துள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி வனசரக அலுவலர் அப்துல் ஹமீது, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் வெட்டி சென்ற சந்தன மரத்தின் அடி பகுதியை தோண்டி வெளியே எடுத்து எடை போட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் 8 கிலோ எடையுடைய மரக்கட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தன மரத்தை கடத்தி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.