கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நடேசா பெட்ரோல் பங்க் பிரிவு ரோடு அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற 3 வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பிசெல்ல முயற்சி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர்கள் கேரள பாலக்காடு மாவட்டம் நூரணி கிராமம் பாரத் நகரை சேர்ந்த நவாஷ் (எ) சுடு, ஆண்டாளூர் கேட் பகுதியை சேர்ந்த முகமது அசாத், கலப்புரம் முகமது யாசின் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.