பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்படி அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி காவல்துறையினர் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் காவல்துறையினர் சில பகுதிகளில் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், தனிப்படையினர் பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான பதிலை அளித்ததால் காவல்துறையினர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மங்களாபாளையம் வலையன்குடை பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பதும், இவர் பெருந்துறை, காஞ்சிக்கோவில், மலையம்பாளையம், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து வினோத்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வினோத்குமாரிடம் இருந்த 54 பவுன் தங்க நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.