சரக்கு ஆட்டோவில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வறட்சி பகுதியாக இருக்கும் நெய்வேலி பகுதிக்கு காவிரி தண்ணீர் செல்வதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள அக்னியாறு குடிநீர்த்தேவை மற்றும் விவசாய சாகுபடிக்கு பயன்படுவதால் முக்கிய நீராதாரமாக உள்ளது. இதனையடுத்து அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. இந்நிலையில் அக்னியாற்றில் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டதால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி இரவு நேரத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நெய்வேலி பகுதியில் வசிக்கும் ராஜ்கிரண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ராஜ்கிரண் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்கிரணை கைது செய்ததோடு மணல் கடத்தலுக்கு பயன்பட்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து தலைமறைவாக உள்ள ஆட்டோ உரிமையாளரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.