மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சண்முக நகரில் வீரண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயது குழந்தையும் இருக்கின்றனர். இதில் கோவிந்தராஜ் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஜெயக்குமார் என்பவரும் வேலுநகர் பகுதியில் உள்ள டாஸ்மார்க்கிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நண்பர்களான இருவரும் கடையில் மது வாங்கி விட்டு அங்குள்ள பழைய கட்டிடத்தில் அமர்ந்து குடித்துள்ளனர். அந்த வேளையில் ஜெயக்குமார் கோவிந்தராஜின் மதுபானத்தை எடுத்து அருந்தியதால் நண்பர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின் போதை மயக்கத்தில் இருந்த கோவிந்தராஜ் மற்றும் ஜெயக்குமார் மதுபாட்டில்களை உடைத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஜெயக்குமார் மது பாட்டிலால் கோவிந்தராஜை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். இதனை அறிந்த கோவிந்தராஜனின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறு சம்பவத்தின் போது ஏற்பட்ட மோதலில் ஜெயக்குமாருக்கும் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜனின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.