ஆட்டோ டிரைவர் சரமாரியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மருந்து கொத்தள சாலை கொடிமரத்து பகுதியில் பிரகாஷ் என்ற ஆட்டோ டிரைவர் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் பிரகாஷ் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிரகாஷின் நண்பரான மருந்து கொத்தள ரோடு தெருவில் வசித்து வரும் ஆனந்த், தனது நண்பர்களான பாப்பாகோவில் புதிய கல்லார் பகுதியில் வசித்து வரும் சூர்யா, நாகை வ.உ.சி தெருவில் வசித்து வரும் சிவபவித்திரன் ஆகியோர் சேர்ந்து பிரகாஷ் வீட்டிற்கு சென்று மது குடித்துள்ளனர். அப்போது பிரகாஷ் தனது வீட்டிற்கு சூர்யாவை ஏன் அழைத்து வந்தாய் என கேட்டு சிவபவித்ரனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கிருந்த சூர்யா, ஆனந்த், சிவபவித்ரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரகாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ஆனந்த், சூர்யா, சிவபவித்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்ததோடு அந்தப் பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பிரகாஷின் உறவினர்கள் சடலத்தை வாங்காமல் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் சமரசம் அடைந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.