தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில்கள் இருப்பது மிகவும் குறைவுதான். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூர் பகுதியில் சரஸ்வதி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் கடந்த 26 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இந்நிலையில் இன்று சரஸ்வதி பூஜையை ஒட்டி சரஸ்வதி தேவிக்கு கோயிலின் சார்பாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதில் பால், தேன், திரவியம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதன் பின் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து செல்கின்றனர். இதனை அடுத்து விஜயதசமி நாளான நாளை பால வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றது. இதில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அ எழுதி பழகி தங்களுடைய கல்வியை தொடங்குவார்கள். இதனால் திருவாரூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா மற்றும் பேரளம் போலீசார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான தண்ணீர், கழிவறை போன்ற அடிப்படை தேவைகளை கோவிலின் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர் குழுவினர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.