திருச்சம்பள்ளியில் சட்டவிரோதமாக சாராய ஊறலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் ஆங்காங்கே சாராய ஊறல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, அந்தந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சம்பள்ளி கிராமத்தில் சந்தேகப்படும் பகுதிகளில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் 4 இடங்களில் சாராய ஊறல் போட்டு இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து 720 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறலில் ஈடுபட்ட திருச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த முருகன், தினேஷ், சுப்பிரமணியன், கபிலன் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர்.