சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாராய விற்பனையை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி, சாராயம் விற்பனை செய்து வந்த கொட்டகைக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இவற்றின் எதிரொலியாக சாராய விற்பனையை முற்றிலுமாக தடுத்து சாராய விற்பனை கும்பலை பிடிக்க துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் நேதாஜி நகர் லாலா ஏரி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்காக 10 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழிதுள்ளனர். மேலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட அய்யப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.