திருப்பத்தூரில் சட்டவிரோதமாக வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 1,238 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்கள், 80 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 225 லிட்டர் சாராயம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீசார் நடத்திய விசாணையில், வாணியம்பாடி அருகில் மாகடப்பாவை சேர்ந்த பாபு என்பவரும், மற்றொரு நபரும் சேர்ந்து சாராயம் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இவர்கள் மோட்டார்சைக்கிளில் லாரி டியூப்பில் அடைத்து சாராயம் கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாபு உட்பட மாவட்டம் முழுவதிலும் 18 பேரை சாராய வழக்கில் கைது செய்துள்ளனர்.