மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் வியாபாரிகளை கண்காணிக்க ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 10- ம் தேதியில் இருந்து மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிற மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வருதல் மற்றும் சாராயத்தை காய்ச்சுதல் போன்றவை தடுப்பதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.ஜி.பி உத்தரவின்படி, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆபரேசன் வின்ட் என்ற திட்டத்தில் மது, சாராயம் விற்றலை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு வருகின்ற 22-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் மது, சாராயம் விற்பதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.ஜி லோகநாதன் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் மது சாராயம் விற்பதை தடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை மது சாராயம் விற்பனையில் கைது செய்யப்பட்ட நபர்களின் விபரம், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், சாராய ஊறல் குறித்தும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தனிப்படையினரின் செயல்பாடுகள் பற்றியும் ஐ.ஜி லோகநாதன் கேட்டறிந்துள்ளார்.
இதுகுறித்து ஐ.ஜி லோகநாதன் கூறியபோது மாவட்டத்தில் ஏற்கனவே சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட இடங்களை ஜி.பி.எஸ் மூலம் வரைபடம் தயார் செய்யப்பட்டு அந்த இடங்களில் காவல் துறையினர் கூடுதல் கண்காணிப்பு மற்றும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மலைபகுதியில் சாராயத்தை காய்ச்சு விற்பதை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமராவின் மூலமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐ.ஜி கூறியுள்ளார். மேலும் சாராய வியாபாரிகள் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் காவல்துறையினருக்கு ஐ. ஜி லோகநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.