Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்ஃப்ராஸ் அகமது பாகிஸ்தான் அணியில் கம்பேக் தரலாம்… ஆனால்? – இம்ரான் கான்!

உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் சர்ஃப்ராஸ் அகமது பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படுவார் என அந்நாட்டு பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும், பயிற்சியாளராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பதவியேற்றதில் இருந்து, பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.

சர்ஃப்ராஸ் அஹமதின் மோசமான கேப்டன்ஷிப் காரணமாக, அவர் கேப்டன் பதவியிலிருந்து மட்டுமின்றி பாகிஸ்தான் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். அதேசமயம், அவருக்கு பதிலாக டி20, ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியக்கப்பட்டார். அதேபோல், பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அசார் அலி தேர்வு செய்யப்பட்டார்.

Sarfaraz s

இதனால், பாபர் அசாம் மீண்டும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படுவாரா அல்லது அவர் தொடர்ந்து அணியிலிருந்து ஓரம்கட்டப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், இது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான்,

“சர்ஃப்ராஸ் அகமது நிச்சயம் பாகிஸ்தான் அணியில் சேர வேண்டும் என்றால் அவர் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும். அப்படி அவர் நன்கு விளையாடினால் நிச்சயம் பாகிஸ்தான் அணியில் கம்பேக் தருவார். டி20 போட்டியை கருத்தில் கொண்டு மட்டுமே ஒரு வீரரின் ஆட்டத்திறனை தீர்மானிக்க முடியாது. பாகிஸ்தான் பயிற்சியாளராக மிஸ்பாக நியமிக்கப்பட்டதன் மூலம், அணி நல்ல முன்னேற்றத்தை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கவுள்ளது.

பாகிஸ்தான் அணிக்காக 49 டெஸ்ட், 116 ஒருநாள், 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் அகமது, இதுவரை 5771 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |