கடலில் சிக்கிய பெரும்பாலான நெத்திலி மீன்களின் விலையில் சரிவு ஏற்பட்டதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களும் கொண்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தற்போது மேற்கு கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை காலம் அமலில் இருப்பதால் கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்கள் மட்டும் வைத்து மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக குளச்சல் கடல் பகுதியில் நெத்திலி மீன்கள் மட்டும் கிடைத்து வருகின்றது. இந்நிலையில் குளச்சல் மீனவர்களின் கட்டுமரங்களில் பெரும்பாலான நெத்திலி மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் துறைமுகத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன் ஒரு கூடை நெத்திலி மீன்கள் 2,500 ரூபாய் முதல் 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று நெத்திலி மீன்கள் விலை கடுமையாக சரிந்து 800 ரூபாய்க்கும் அதற்கு கீழ் விலை போனதால் வந்த மீனவர்கள் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின் நெத்திலி மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றுள்ளனர். இவ்வாறு விலை சரிவு காரணமாக சில மீனவர்கள் மீன்களை கருவாடாக மாற்றுவதற்கு கடற்கரை மணற்பரப்பு, பாலம், துறைமுக வளாகம் போன்ற பகுதிகளில் உலரப் போட்டு இருந்தனர். இதைப்போன்று கோடிமுனை, வாணியங்குட கிராமங்களிலும் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்ததால் அதை கருவாடு வியாபாரிகள் மட்டுமல்லாமல், வெளி மாவட்ட மீன் எண்ணை ஆலையினரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.