இன்றைய நவீன உலகத்தில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பலர் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு தங்களின் சிந்தனைகளை பதிவு செய்துவருகின்றனர். பழமையில் ஊறி பெண் அடிமைத்தனம் அதிகமாக இருந்த அந்த காலத்தில் துணிச்சலுடன் பெண் விடுதலைக்காக போராடிய சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி விரிவாக காண்போம்.
சரோஜினி நாயுடு ஒரு புகழ்பெற்ற கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் பாரதிய கோகிலா என்றும் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டவர். சரோஜினி நாயுடு இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவராகவும் உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆளுநராகவும் திகழ்ந்தார். சரோஜினி நாயுடு ஹைதராபாத்தில் ஒரு பெங்காலி இந்து குடும்பத்தில் 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஒரு விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் தத்துவஞானி ஆவார்.
இவர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். சரோஜினி நாயுடுவின் தாயார் பாரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர் ஆவார். பெங்காலியில் பல கவிதைகளை அவர் எழுதியுள்ளார். சரோஜினி நாயுடு இளமையிலிருந்தே ஒரு அறிவுக்கூர்மை மிக்க மாணவியாக திகழ்ந்துள்ளார். அவர் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் கைதேர்ந்தவராக திகழ்ந்தார். அவரது தந்தை அவரை ஒரு கணிதமேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ உருவாக்க விரும்பினார். ஆனால் சரோஜினி நாயுடுவுக்கு கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே அவர் ஆங்கில கவிதைகளை எழுதத் தொடங்கினார்.