சசிகலாவை MLA கருணாஸும், MLA தனியரசுவும் சந்திக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான உடனே சென்னைக்கு திரும்பினார். பின்னர் எந்தவொரு வெளி இடத்திற்கும் வரமால் மௌனமாக இருந்து வந்த சசிகலா நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால் வெளியில் வந்தார். அதற்கு பிறகு அவரை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சந்தித்தனர்.
மேலும் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோரும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து பேசினர். இந்நிலையில் அதிமுக கட்சி கூட்டணியில் MLA-வாக இருக்கும் முன்னணி நடிகரான கருணாஸ் மற்றும் MLA தனியரசு ஆகிய இருவரும் சசிகலாவிற்கு சாதகமாக தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கருணாஸ் செய்தியாளர் சந்திப்பில் நான் MLA ஆனதற்கு காரணமே சசிகலாதான் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் MLA -க்களான கருணாசும் தனியரசுவும் கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது . சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அதிமுக கட்சியின் கூட்டணியில் இருக்கும் 2 MLA – க்கள் சசிகலாவை சந்திக்கவிருக்கும் தகவல் அதிமுக-விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களைப்போல் அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் சசிகலாவை சந்திக்க முயன்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.