சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 3 காவலர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு விசாரணை விரைவாக நடைபெற வேண்டும், தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையை கையிலெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி காவல் துறையினரும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொலை வழக்கு:
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் டிஎஸ்பி அனில்குமார் காணொளி வாயிலாக ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றது. தலைமை காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் மற்றும் முத்துராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஆஜர்:
அதே போல பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், முருகன் ஆகியோரை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள். தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் தலைமைக் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க படவேண்டும், அவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து 105 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் குற்றவாளிகளை கொண்டு செல்வதில் கடினமான விஷயம். ஆகவே தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்க நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும். அவர்கள் முன்பாகவே குற்றவாளிகளை ஆஜர்படுத்தலாம் என உறுதி அளித்தனர்.
இனி நடக்க கூடாது:
தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி இந்நடவடிக்கை உள்ளது. அதற்காக வாழ்த்துக்கள் என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்தார்கள். ஒரு மனிதன் எதற்காக இன்னொரு மனிதனை அடிக்கிறான். விலங்கு நிலையிலிருந்து சமுதாய வாழ்க்கைக்கு வந்து இருக்கும் மனிதன் இது போன்று நடந்து கொள்வது இயல்பு நிலைக்கு மாறானது. அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும். தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் ஒருபோதும் நடக்கக் கூடாது என்பது கருத்தை பதிவு செய்தனர்.
சிபிசிஐடி போலீஸ் கஸ்டடியில் இருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் உட்பட 3 பேரிடம் காலை 6 மணி முதல் கிட்டத்தட்ட 13 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது. இதையடுத்து கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடல் ரீதியான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டடு நீதிபதி ஹேமா முன்னிலையில் அஜர் படுத்தப்பட்டார். இதில் தொடர்புடைய 3 காவல் அதிகாரிகளுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.