சட்டவிரோதமாக வெளிமாநிலத்திற்கு அரிசியை கடத்துவதற்கு முயற்சி செய்த வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்வதை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ் உத்தரவின்படி, தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் ஒரு லாரியிலிருந்து வேறொரு வேனிற்கு அரிசி ஏற்றிக் கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ், விஜயகுமார், அஜித் என்பதும், இவர்கள் வெளி மாநிலத்திற்கு அரிசியை கடத்துவதற்கு முயன்றதும் தெரியவந்தது.
அதன்பின் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 12 டன் அரிசியை கைப்பற்றினர். மேலும் ஒரு லாரி, ஒரு வேன், 2 மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியாவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் சம்பந்தப்பட்ட மற்றொருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.