சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ஜருகு ஊரை சேர்ந்த முருகன் ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று அதியமான்கோட்டை காவல்துறையினர் சென்னையன்கொட்டாய், நார்த்தம்பட்டி தேங்காய்மரத்துபட்டி போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வேடியம்மாள், வசந்தா, கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.